சொந்த சின்னத்தில் தான் போட்டியிடுவோம் - திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு
தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக கூட்டணியில் மதிமுக இடம் பெற்றுள்ளது என்றும், வரும் தேர்தலில் தங்கள் கூட்டணி 200 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், தேர்தலில், மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும், இதனால், தங்களது வெற்றி வாய்ப்பு எந்த விதத்திலும் பாதிக்காது என்றார். அதே நேரத்தில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று திமுக எவ்வித நிர்பந்தமும் செய்யவில்லை என்றும் வைகோ விளக்கம் கொடுத்தார்.
மேலும், வரும் தேர்தலில் ரஜினி யாருக்கும் வாய்ஸ் கொடுக்க மாட்டார் என்றும் வைகோ கருத்து தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த சில கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன.
இதே நிலை சட்டமன்ற தேர்தலுக்கும் தொடரும் என சொல்லப்பட்டு வந்தது.
ஆனால் அதனை கூட்டணி கட்சிகள் மறுத்துள்ளன. ஏற்கனவே விசிக தனிச் சின்னத்தில் போட்டியிடப் போகிறோம் என்று அறிவித்துள்ளது.
தற்போது மதிமுகவும் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும் என வைகோ அறிவித்துள்ளார்.