திமுகவில் கனிமொழி ஓரம் கட்டப்படுகிறார் - அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி
திமுகவில் உட்கட்சிப் பூசல் அதிகமாக இருக்கிறது. உள்ளே புகைந்து கொண்டிருக்கிறது என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். மேலும் அவர், ”ரஜினி அரசியல் கட்சி தொடங்காதது அதிமுகவுக்குச் சாதகமா? பாதகமா? உடல்நலம் கருதி அவர் அரசியலுக்கு வரவில்லை எனச் சொல்லியிருக்கிறார்.
அதில் நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. ஆண்டவன் அவருக்கு எச்சரிக்கை செய்துள்ளார். அதிமுகவைப் பொறுத்தவரையில் எங்களுக்குண்டான வாக்குகள் எப்போதும் பிரியாது. எவ்வளவோ சோதனைகளைத் தாண்டி எம்ஜிஆர் கட்சி தொடங்கினார். இரட்டை இலைக்கு வாக்களித்த கைகள், இரட்டை இலைக்குத்தான் இப்போதும் வாக்களிக்கும்.
அதிமுக உடைந்துவிடும் என ஸ்டாலின் சொல்கிறார். இது என்ன மண்சட்டியா? அதிமுக இரும்பாலான எஃகு கோட்டை. யாரும் இதை அசைத்துக்கூடப் பார்க்க முடியாது. இரட்டை இலை இமயமலை போன்று இன்றைக்கும் காட்சி தருகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியை உடைக்கப் பார்த்தார்கள், ஆனால் நடக்கவில்லை.
அதிமுகவை உடைக்கவோ, சின்னத்தை முடக்கவோ முடியாது. திமுகவில் உட்கட்சிப் பூசல் அதிகமாக இருக்கிறது. உள்ளே புகைந்து கொண்டிருக்கிறது. திமுகவில் வாரிசுக்குத்தான் மரியாதை. உதயநிதிக்குக் கட்சியில் முக்கியத்துவம் தரப்படுகிறது. பெரியார், அண்ணா, கருணாநிதி, தற்போதைய தலைவர் படம் மட்டும் பேனர்களில் வைக்க வேண்டும் என, ஸ்டாலின் உத்தரவிடுகிறார்.
இது உதயநிதிக்குப் பொருந்தாதா? அவருக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.
துரைமுருகன், பொன்முடி, கனிமொழி படங்களைப் போடக்கூடாதா? இது முழுக்க முழுக்க கனிமொழிக்கு வைத்த 'செக்'. எங்கு கட்சியைப் பிடித்துகொள்ளப் போகிறாரோ என இப்போதே கனிமொழியை மட்டம் தட்டுகின்றனர்.