தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை குறைகிறது - திமுக
திமுகவின் முக்கிய நிர்வாகிகள் இன்று தலைமை தேர்தல் அதிகாரியைச் சந்தித்து பல்வேறு புகார்களை தெரிவித்தனர்.
பல்வேறு இடங்களில் வாக்கு எண்ணும் மையங்களில் பலரும் அத்துமீறி நுழைவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
”தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை குறைகிறது” என்று தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து பின் திமுக நிர்வாகிகள் பொன்முடி, ஆர்.எஸ் பாரதி, ஆ. ராசா உள்ளிட்டோர் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளனர்.
திமுக துணை பொதுச் செயலாளர் பொன்முடி பேசுகையில் “வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் வெளி நபர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். திருக்கோவிலூர் தொகுதியில் வாக்கு எண்ணும் மையத்தில் தேர்வு நடத்தப்படுகிறது.
இதனை சுட்டிக்காட்டிய பிறகே தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தது. தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை குறைகிறது. வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் வெளி நபர்கள் அனுமதிக்கக்கூடாது.
அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தான் பெரும்பாலும் இதுபோன்ற புகார்கள் வருகின்றன. மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து தேர்தல் ஆணையத்தை கட்டுப்படுத்துகிறார்களோ என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது” என்றார்.
இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.