ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு; தி.மு.க சும்மா விடாது - அமைச்சர் உதயநிதி!
ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்ததை திமுக அரசு சும்மா விடாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் குண்டு வீச்சு
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் மெயின் கேட் முன்பு தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் குண்டு வீசினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
அவரிடம் இருந்து மேலும் இரண்டு பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆளுநர் மாளிகை புகார் அளித்துள்ளது. அதில் 'திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மூலம் ஆளுநருக்கு தொடர் அச்சுறுத்தல் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக அரசு சும்மா விடாது
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதினத்திற்கு ஆளுநர் சென்ற போது கான்வாய் தாக்கப்பட்ட சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும் ஆளுநர் மாளிகை அளித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த சம்பவம் தொடர்பாக கூறியதாவது "காவல் துறைக்கு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. எந்தவிதமான வன்முறையாக இருந்தாலும், அது கண்டிக்கத்தக்கது. திமுக அரசு இதை சும்மா விடாது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.