ஸ்டெர்லைட் ஆலைக்கு முழுமையாக சீல் வைக்கப்படும் - மு.க.ஸ்டாலின் கூறியது என்ன?

DMK Tamil Nadu Stalin Oxygen Sterlite
By mohanelango Apr 27, 2021 12:42 PM GMT
Report

இந்தியாவில் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்சிஜன் தயாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

இந்நிலையில் இந்த முடிவின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சியான திமுக அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஆதரவு தெரிவித்திருந்தது.

ஆனால் திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, மதிமுக இந்த முடிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளன. 

இந்த நிலையில் ஆக்சிஜன் தேவைக்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒப்புக்கொண்டதாக திமுக தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது.

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பதிவில், “ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு தற்காலிக அனுமதி மட்டுமே வழங்கப்பட வேண்டும் என மனிதாபிமான அடிப்படையிலேயே தி.மு.க. வலியுறுத்தியது.

தமிழகத்தின் ஆக்சிஜன் தேவையை நிறைவேற்றிய பிறகே மற்ற மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டும் - இதற்கான வழிகாட்டுதல்களை @PMOIndia வழங்கிட வேண்டும்.” என்றுள்ளார்.

மேலும் திமுக அரசு அமைந்ததும் தற்காலிக அனுமதிக் காலம் முடிந்தவுடன் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக சீல் வைக்கப்படும் என்றுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக திமுகவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.