பொங்கல் தொகுப்பு முதல் நகைக்கடன் தள்ளுபடி வரை ... ஓராண்டில் சர்ச்சைகளில் சிக்கிய திமுக அரசு
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று இன்றோடு ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் கடந்த ஒரு ஆண்டில் அரசு பலமுறை சர்ச்சைகளில் சிக்கியது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றியது. மே 7 ஆம் தேதி முதலமைச்சராக முதல்முறையாக மு,.க ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவருடன் அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
கடந்த 2006-2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் ரவுடிசம், அராஜகம் போன்ற சம்பவங்கள் நடைபெற்றதாக எழுந்த நிலையில் இம்முறை மிகக்கவனமாக மு.க.ஸ்டாலின் தனது ஆட்சியை நடத்தி வருகிறார். ஆனால் ஆங்காங்கே வழக்கம்போல சர்ச்சையான சம்பவங்கள் நடந்து தான் வருகின்றன.
- திமுக பதவியேற்புக்கு 3 நாட்கள் முன் மே 4 ஆம் தேதி சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் படம் மற்றும் பேனர்களை கிழித்து உணவகத்தை அப்பகுதி திமுகவினர் சேதப்படுத்தினர். இது ஆட்சிக்கு வராமலே திமுகவின் மக்களுக்கு எதிர்மறையான எண்ணம் வர அடித்தளமாக் அமைந்தது. ஆனால் சுதாரித்த ஸ்டாலின் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்தும் உத்தரவிட்டார்.
- திமுகவின் மிக முக்கியமான தேர்தல் வாக்குறுதியாக பார்க்கப்பட்ட கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பு நீண்ட நாட்களுக்குப் பின் அமல்படுத்தப்பட்டது. ஆனால் 2020ஆம் ஆண்டு பயிர்க்கடன் பெற்றவர்களுக்கும், 40 கிராமுக்கு மேலே நகை கடன் பெற்றவர்களுக்கும் தள்ளுபடி கிடையாது என்ற அறிவிப்பு பொதுமக்களுக்கு ஏமாற்றமளித்தது. அதேபோல் இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்களுக்கும் அது முழுதாக தள்ளுபடி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
- கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத்தொகுப்புக்கு பணம் கொடுக்கப்பட்டு வந்தது. அது திமுக ஆட்சியிலும் இருக்கும் என நினைத்த மக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் இருபத்தியோரு பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்புப் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். ஆனால் இவற்றில் இடம்பெற்ற பொருட்கள் தரமற்று இருந்ததாக பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் எழுந்தது. இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் விரிவான விளக்க அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.
- திமுக வெற்றி பெற அக்கட்சியால் அளிக்கப்பட்ட மிக முக்கியமான வாக்குறுதியான தமிழ்நாட்டிலுள்ள மகளிருக்கான மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்ற திட்டம் இதுவரை தொடங்கப்படவில்லை.
- கடந்த 2006-2011 ஆட்சியில் மின்வெட்டு பிரச்சனை மிகப்பெரிய தலைவலியாக திமுகவுக்கு அமைந்தது. இம்முறை அப்பிரச்சனை ஏற்படாது என நினைத்தால் கடந்த சில வாரங்களாக மின்வெட்டு பிரச்சனை மக்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. அணில்கள் மின்கம்பிகளில் ஏறுவதால் மின் தடை ஏற்படுவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூற அது மிகப்பெரிய சர்ச்சையானது.
- மணல் திருட்டில் ஈடுபட்டதோடு, அதை பறிமுதல் செய்த காவல்துறை அதிகாரிகளை மிரட்டிய திருச்சி மணப்பாறை கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளரான ஆரோக்கியசாமி திமுகவுக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியதாக கட்சியை விட்டே நீக்கப்பட்டார்.
- சென்னை திருவொற்றியூரில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி பொறியாளரை தி.மு.க எம்.எல்.ஏ. கே.பி. சங்கர் தாக்கிய புகாரின் அடிப்படையில் அவர் வகித்துவந்த பகுதிச் செயலாளர் பதவியிலிருந்து திமுக அதிரடியாக நீக்கியது.
இப்படி திமுக அரசின் ஓராண்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதனை சரியாக கையாண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.