தமிழகத்தில் ஓராண்டை நிறைவு செய்த மு.க.ஸ்டாலின் அரசு ... செய்த சாதனைகள் என்னென்ன?
தமிழகத்தில் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான ஆட்சி அமைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா பரவலுக்கு இடையே தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா முதல் தவணையாக ரூபாய் 2000 , ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, அனைத்து மகளிருக்கும் சாதாரண நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் இலவசப் பயணம், மக்களின் கோரிக்கை மனுக்களை விசாரிக்க “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற தனித்துறை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் கொரோனா தொற்றாளர் களின் மருத்துவக் கட்டணத்தை அரசு செலுத்தும் என்று 5 கோப்புகளில் கையெழுத்திட்டு அசத்தினார்.
மேலும் மக்களைத்தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, வேளாண் துறைக்கு தனி பட்ஜெட், பயிர்க்கடன், நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, கிராமப்புற சாலைகள் அமைத்தல், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் ஏழு பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியது, புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு, பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் வேந்தராக இருப்பதை நீக்குவது, பொருளாதாரத்தை சீராகக் கொண்டுசெல்ல ரகுராம் ராஜன், எஸ்தர் டஃப்லோ, ஷாந்த்ரே உள்ளிட்டோரை அடக்கிய குழு அமைத்தது என இந்த அரசு பல திட்டங்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.
அதேசமயம் அரசு பணிக்கான போட்டித்தேர்வில் தமிழ் மொழி தகுதித்தாளில் தேர்ச்சி கட்டாயம் என அரசாணை வெளியீடு, அரசு பள்ளியில் படித்து கல்லுாரியில் சேரும் மாணவிகளுக்கு மூன்றாண்டுகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படுவது, இன்ஜினியரிங் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதா, கோவில் நிலங்களை மீட்பது, பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்தது போன்ற நடவடிக்கைகள் பாராட்டைப் பெற்றது.
திமுக அரசின் வாக்குறுதிகளை நிறைவேற்ற காலக்கெடுவாக அடுத்த 10 ஆண்டுகளை கணித்திருந்தாலும் பொதுமக்கள் விரைவிலேயே அரசு நிறைவேற்றினால் நன்றாக இருக்கும் என கருதுவதால் வரப்போகும் 4 ஆண்டுகள் திமுக என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.