திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது வழக்குப்பதிவு - அதிரடி காட்டிய அதிகாரிகள்
சட்டமன்றத் தேர்தல் நாளை தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. கடந்த ஒரு மாதம் மேலாக தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் களம் இறங்கின. பிரச்சாரத்தில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. சூறாவளி பிரச்சாரம் செய்த அனைத்து கட்சிகளும் நேற்றுடன் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்தன.
இந்நிலையில், அனைத்து கட்சிகளும் நாளை நடைபெறும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. அதே நேரத்தில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடக்கும் பணியும் ஒருபுறம் தீவிரமாக நடந்து கொண்டுதான் உள்ளது. இதனையடுத்து, வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதிக்குட்பட்ட குப்பத்தாமோட்டூர் பகுதியில் நேற்று இரவு தி.மு.க பிரமுகர் கோபி என்பவர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.
உடனே பறக்கும்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டார்கள். அதில் கோபி என்பவர் பணப்பட்டுவாடா செய்தது உறுதியானது. அவரிடமிருந்து 56 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் திமுக துண்டு பிரசுரங்களை அதிகாரிகள் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

வழக்குப் பதிவு செய்த போலீசார் திமுக பிரமுகர் கோபியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக கைதான கோபி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று காட்பாடி தொகுதி வேட்பாளரும், தி.மு.க பொதுச்செயலாருமான துரைமுருகன் மீது பிரிவு 171eன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை பெற முயற்சித்தல், அவதூறாக பேசுதல் மற்றும் அரசு அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.