ஜெம் வீரமணி வழக்கில் நடந்தது என்ன? திமுக விளக்கம்
dmk explains we didnt give up gem veeramani case: ஜெம் வீரமணியின் போக்சோ வழக்கில் திமுக ஆட்சியில் நடந்தது என்ன என திமுக சட்டத் துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ விளக்கமளித்துள்ளார்.
ஜெம் வீரமணி வழக்கு
பிரபல கிரானைட் தொழில் அதிபரும், ஜெம் குழுமத்தின் தலைவருமான 84 வயதான வீரமணி, சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில், குறைந்தது 9 சிறுமிகளை அவர் துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும், முக்கிய பிரமுகர்கள் பலருக்கும் சிறுமிகளை அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரும் தப்பி விடக்கூடாது என முதல்வர் விஜய், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவிற்கு கேள்வி
இந்த வழக்கு குறித்து பேசிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், "திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான புகார் மூடி மறைக்கப்பட்டுள்ளது.

அப்போதைய ஆட்சிக் காலத்தில் காவல்துறை மு.க. ஸ்டாலின் அவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அவருக்கு நன்கு அறிமுகமான ஒரு தொழிலதிபர் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில், இவ்வளவு பெரிய குற்றம் சென்னை நகரத்திலேயே நடந்தும், அது ஏன் அவரது ஆட்சியில் மூடி மறைக்கப்பட்டது?
யார் யாரிடம் பணம் பெற்றுக்கொண்டு குற்றவாளியைத் தப்பிக்க விட்டார்கள் என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்" என பேசினார்.
திமுக விளக்கம்
இது குறித்து விளக்கமளித்துள்ள சட்டத் துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ, "ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கை திமுக ஆட்சியில் நீர்த்துப் போகச் செய்ததாக, அரசியல் ஆதாயத்திற்காக நிர்மல் குமார் பேசியிருப்பது முற்றிலும் தவறானது.

2025 நவம்பர் 7ல் திமுக ஆட்சியில்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரின் வீடு சோதனையிடப்பட்டு அப்போதைய ஆதாரங்கள் அடிப்படையில் புலன் விசாரணை செய்யப்பட்டது.‘வழக்கை கைவிடவில்லை, உரிய ஆதாரங்கள் கிடைக்கும் வரை மேல் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது' என்றே போக்சோ நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்தது.
எனவே, திமுக ஆட்சியில் அந்த வழக்கின் புலன் விசாரணை கைவிடப்படவில்லை. மேல் விசாரணை தொடரும் என்றுதான் குறிப்பாணை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இதுபோன்ற வழக்குகளில் ஆதாரமற்ற செய்திகளைப் பரப்புவதே, நிர்மல் குமார் எப்படியாவது குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்றிவிடலாமா என்ற எண்ணத்தோடு பேசுவதாகத்தான் தெரிகிறது.
ஏனென்று சொன்னால், இல்லாத அரசியல் அழுத்தங்களை இருப்பதாகச் சொன்னால், பாதிக்கப்பட்ட அந்த நபர்கள், இந்த வழக்கில் ஏதோ மிகப் பெரிய பிரச்சினை இருப்பது போல் இருக்கிறது என்று கருதி, அவர்கள் சாட்சியம் அளிக்காமல் அதிலிருந்து விலகிச் செல்வதற்காகவே, நிர்மல் குமார் குற்றம் சாட்டப்பட்ட நபர்களைக் காப்பாற்றுவதற்காகவே இந்த அறிக்கையை வெளியிடுவதாக நாங்கள் நம்புகிறோம்." என தெரிவித்துள்ளார்.