புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க : அமலாக்கதுறை சோதனைக்கு முதலமைச்சர் கண்டனம்
சென்னையில் அமலாக்கத்துறை சோதனை நடக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் திமுகவினர் குவிந்துள்ளனர்.
அமலாக்கதுறை சோதனை
கரூர் மற்றும் சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சரின் இல்லம் மட்டுமில்லாமல், தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது.
ஆர்.எஸ் பாரதி வருகை
இதனால் ஒரு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்துக்கு திமுக நிர்வாகிகள் வருகை தந்துள்ளனர். அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்துக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வருகை தந்துள்ளனர்.
அரசு போக்குவரத்துக் கழக பணி நியமன முறைகேடு புகார் எதிரொலியாக, காலை 8 மணி முதல் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இந்த சமயத்தில், அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், திமுக நிர்வாகிகள் திரண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஆர்.எஸ் பாரதி
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ் பாரதி : தலைமைச் செயலாளரிடம் அனுமதி பெறாமலேயே தலைமைச் செயலகத்தில் அத்துமீறி சோதனை செய்து வருகின்றனர் திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுவதாக கூறினார். மேலும் செந்தில் பாலாஜியின் நிலை என்ன ஆனது என கேட்டோம், அதிகாரிகளிடம் பதில் இல்லை.
அவரையாவது இங்கு அனுப்புங்கள் என சொன்னோம், அதற்கும் செவி சாய்க்கவில்லை. மனித உரிமையை மீறும் வகையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது; செந்தில் பாலாஜியின் நிலை குறித்து அறிய விரும்பினோம். ஆனால், அவரை சந்திக்க அனுமதிக்கவில்லை என கூறினார்.
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார், அதில் அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது; அதனை அவர்களே உணரும் காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது என அறிக்கை வெளியிட்டுள்ளார்.