திமுக தேர்தல் அறிக்கையில் வன்னியர்களுக்கு 15% இடஒதுக்கீடா? வேல்முருகன் தகவல்
வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கினால் தான் அதிமுகவில் கூட்டணி என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி வரும் நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு 15 சதவீதம் இடஒதுக்கீடு நிச்சயம் கிடைக்கும் என தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கை திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் போராட்டம் நடத்தி வருகிறார். மேலும், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் எனில் 20 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.
இதனால், அதிமுக - பாமக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், தமிழகத்தில் தேர்தல் வருவதால் டாக்டர் ராமதாஸ், சீட் வாங்கும் உத்திக்காக இதனை பயன்படுத்தி வருகிறார் என குற்றம் சாட்டியுள்ளார்.