மக்கள் மனம் கவரும் திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11ல் வெளியிடப்படும்: ஸ்டாலின் தகவல்
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிக்கையை மார்ச் 11ம் தேதி வெளியிடுகிறது என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி போன்றவை உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக மக்களின் விடியலுக்கான திட்டங்களுடன் தேர்தல்அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. மக்களின் மனதை கவரும் வகையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.
மக்களால் மக்களுக்காகவே உருவான திமுக தேர்தல் அறிக்கை தேர்தலில் கதாநாயகனாக விளங்கும். தமிழக மக்களின் மனங்களைக் கவரும் வகையில் திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11ல் வெளியிடப்படும். கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக வெற்றிகரமாகவும் நடைபெறுகிறது என்றார்.