அதிமுக காணாமல் போகுமா? நீ போலீஸ் தானே.. கண்டுபிடிச்சு கொடு - விளாசிய ஈபிஎஸ்!
திமுக ஆட்சியில் எல்லாத் துறைகளிலும் ஊழல் ஏற்பட்டுள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
மத்திய சென்னை மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக சார்பில் பார்த்தசாரதி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை புரசைவாக்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர் "திமுக ஆட்சியில் எல்லாத் துறைகளிலும் ஊழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் போதை பொருட்கள் எளிதாக கிடைக்கிறது. பள்ளி, கல்லூரிகளில் கஞ்சா விற்ற 2138 பேரை கண்டுபிடித்துள்ள இந்த அரசு 148 பேரையும் மட்டும் கைது செய்துள்ளது. திமுக அயலக அணியின் துணை அமைப்பாளராக இருந்தவர் போதைப் பொருட்கள் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டுபிடித்து கொடு
திமுக ஆட்சியில் பெண்களுக்கு மட்டும் அல்லாமல் காவல்துறையினருக்கும் பாதுகாப்பு இல்லை" என்றார். மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி "நான் அரசியலுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது.
ஆனால் அரசியலுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கூட ஆகாத ஒருவர் 2024 தேர்தலுக்குப் பிறகு அதிமுக இருக்காது என்கிறார். தம்பி உன்னை போல எத்தனையோ பேரை அதிமுக பார்த்துள்ளது. காணாமல் போனால் நீ போலீஸ் தானே கண்டுபிடித்து கொடு. விரக்தியின் விளிம்பில் தான் இப்படி பேசுகிறார். பொறுமையாக பேசு. அதிமுகவில் 2.16 தொண்டர்கள் உள்ளனர். உங்கள் கட்சியில் விரல்விட்டு எண்ணும் அளவிலே உள்ளனர். எதை பேச வேண்டுமோ அதை மட்டும் பேசுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.