திமுக சார்பில் இலங்கை மக்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தத்தளிக்கும் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுளது. அதேசமயம் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா உட்பட பிற நாடுகள் சார்பில் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை மக்களுக்கு அனைத்து தரப்பு பொதுமக்களும் நன்கொடை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். இதுதொடர்பான வெளியான அறிக்கையில் இலங்கையில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ள மக்களுக்குத் தமிழ்நாட்டில் இருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக மத்திய அரசின் அனுமதியும் கிடைத்துள்ளது. முதல் கட்டமாக 40,000 டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன.இந்த சூழ்நிலையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது. எனவே மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து இலங்கை மக்களுக்காக திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்றும், திமுக எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை இலங்கை மக்களுக்காக முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு வழங்குவர் எனவும் அவர் அறிவித்துள்ளார்.