பாஜகவை வளர்த்துவிட்டதே திமுக தான் - சீமான் அதிரடி
தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் மிக பரபரப்பாக நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, மநீம கூட்டணி, அமமுக கூட்டணி, நாம் தமிழர் என ஐந்து முனை போட்டி நிலவுகிறது. இதில் திமுக கூட்டணி பாஜக எதிர்ப்பை வலுவாக முன்னிறுத்தி வருகிறது. அதில் குறிப்பாக கமல்ஹாசன், சீமான் போன்றவர்களை பாஜகவின் பீ டீம் என விமர்சித்து வருகிறார்கள்.
இதற்கு சீமான் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் மூன்றாவது அணியை உருவாக்கி, பா.ஜ.க போன்ற மதவாதக் கட்சிகளை வளர்த்து விட்டது தி.மு.க, தான் என நாம்தமிழர் கட்சி சீமான் குற்றம் சாட்டியுள்ளார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சீமான் பேசியதாவது, ”தமிழர்கள் தமது தொன்மையின் பெருமையை உணர்ந்து மொழிப்பற்றாளர்களாக இருப்பது அவசியம்.
ஜாதி, மதத்தால் தமிழர்கள் பிரிந்ததாலேயே இலங்கைத் தமிழர் பாதிக்கப்பட்டபோது நம்மால் அவர்களுக்கு உதவமுடியாத நிலை ஏற்பட்டது என்பதை உணரவேண்டும். கச்சத்தீவு பிரச்னை, காவிரி, முல்லைபெரியாறு போன்ற பிரச்னைகளில் பா.ஜ.கவும், காங்கிரசும் ஒரே கருத்தில்தான் செயல்படுகின்றன.
இதுவரை தமிழத்திற்காக குரல் கொடுக்கவில்லை, நமது மீனவர்களைத் தாக்கும் இலங்கையை நட்பு நாடு என்கிறார் பிரதமர் நரேந்திரமோடி.
நாம் தான் மூன்றாவது அணியை உருவாக்கி பா.ஜ.கவைத் தோற்கடிக்கும் முயற்சியை முறியடிப்பது போல தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசுகிறார். தமிழகத்தில் மதவாதக்கட்சிகளை காலுான்றச் செய்து மூன்றாவது அணி உருவாக காரணம் தி.மு.க., தான்” என்று கூறினார்.