வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை... திமுக கவுன்சிலரின் தந்தை அடித்துக்கொலை
கும்பகோணத்தில் திமுக கவுன்சிலரின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுகா ரெகுநாதபுரம் மெயின் ரோட்டில் வசித்து வந்த அப்துல் ரசாக் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு பின் ஊருக்கு வந்து ராஜகிரியில் கைலி கடை வைத்து நடத்தி வந்தார்.இவருக்கு நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ள நிலையில் மகள் ஹதிஜா பிவி கும்பகோணம் மாநகராட்சியில் திமுகவின் 3வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார்.
இதனிடையே அப்துல் ரசாக் வழக்கம்போல வியாபாரம் முடித்துவிட்டு நேற்று இரவு வீட்டிற்கு வந்துள்ளார். இதனிடையே இன்று காலையில் வெகுநேரம் ஆகியும் ராஜகிரியில் கடை திறக்காததால் அங்குள்ளவர்கள் அப்துல் ரசாக்கின் மகனுக்கு தகவல் தெரியப்படுத்தி உள்ளனர்.
உடனடியாக மகன் முகமது ஆரிப் தந்தை வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது கதவை உடைக்கப்பட்டுள்ளதையும், தந்தை காயங்களுடன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து அய்யம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அய்யம்பேட்டை ஆய்வாளர் வனிதா மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டு உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து தஞ்சையில் இருந்து கைரேகை நிபுணர் ஹேமா, தடய அறிவியல் நிபுணர் ராமச்சந்திரன் ஆகியோர் வரவழைக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.