திமுக - காங்கிரஸ் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது - எத்தனை தொகுதிகள்?
திமுக - காங்கிரஸ் இடையே இன்று தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக - காங்கிரஸ் தொகுதிப்பங்கீடு
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு விஷயத்தில் திமுக காங்கிரஸ் இடையே இழுபறி நிலவி வந்தது.

திமுக காங்கிரஸ் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்த பின்னர், திமுக வழங்கும் 25 தொகுதிகளை ஏற்க முடியாது என காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர் க்ரிஷ் சோடங்கர் பேசியுள்ளார்.
இதன் காரணமாக கூட்டணியில் விரிசல் உள்ளதாகவும், காங்கிரஸ் தவெக உடன் கூட்டணி அமைக்கும் என தகவல்கள் வெளிவந்தன.
இதனைத்தொடர்ந்து, நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, "கூட்டணி உறுதியாக உள்ளது. பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதன்பிறகு எத்தனை தொகுதிகள் என்பதை அறிவிக்கிறோம்” என கூறினார்.

இந்நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்தில் வைத்து திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
நாளை முதல்வர் மு.க .ஸ்டாலின் முன்னிலையில் காங்கிரஸ் வேட்பாளர் மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.