திமுக - காங்கிரஸ் தேர்தல் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் - கே.எஸ்.அழகிரி
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. திமுக - காங்கிரஸ் ஒரே கூட்டணியில் தேர்தலைச் சந்திக்கின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் எனச் சொல்லப்பட்டு வந்தது. திமுகவுடனான பேச்சுவார்த்தை மகிழ்ச்சிகரமாக இருந்தது என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை தொடங்கினர். திமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி, டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல் காங்கிரஸ் சார்பில், உம்மன்சாண்டி, ரன் தீப் சிங் சுர்ஜிவாலா, கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ் ஆகியோர் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி 'திமுகவுடனான பேச்சுவார்த்தை மகிழ்ச்சிகரமாக இருந்தது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும்' எனத் தெரிவித்தார்.