மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக மத்திய அமைச்சரை சந்தித்து பேச இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் பேட்டி!
மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக, விரைவில் துவங்க உள்ள தமிழக சட்டமன்றம் கூட்டம் முடிந்ததும் மத்திய ஜல் சக்தி அபியான் அமைச்சரை சந்தித்து பேச இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணை முழுவதுமாக நிரம்பி உள்ளது. விவசாயத்திற்கும் குடிநீருக்கும் அந்த அணையில் இருந்து தண்ணீரை மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று திறந்து வைத்தார். இன்று முதல் கவுண்டன்யா ஆற்றில் வினாடிக்கு 100 கன அடி வீதமும், வலது புறம் மற்றும் இடது புறம் கால்வாயில் தலா 75 கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் 19 ஏரிகள் மூலமாகவும் ,நேரடிப் பாசனமாகவும், 8367 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிகழ்ச்சிக்குப்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன்,
மேகதாது அணை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
மேகதாது அணை ஒருபோதும் கர்நாடக அரசு கட்டக்கூடாது என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த போது அதனை உறுதியாக தெரிவித்தார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி,மத்திய ஜல்சக்தி அபியான் துறை அமைச்சரை சந்தித்து பேசும் படி தன்னிடம் தெரிவித்தார்.
எனவே,மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக, விரைவில் துவங்க உள்ள தமிழக சட்டமன்றம் கூட்டம் முடிந்ததும் மத்திய ஜல் சக்தி அபியான் அமைச்சரை சந்தித்து பேச இருப்பதாகவும் துரைமுருகன் கூறினார்.