பட்டப்பகலில் தி.மு.க. பிரமுகர் கொடூரமாக வெட்டிக்கொலை - 4 பேரை கைது - அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரம், கோனேரிக்குப்பம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் சேகர் (52). இவர் காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட பிரதிநிதியாக இருந்து வந்தார். இவருக்கு மனைவி சைலஜா. இவர் தற்போது நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று கோனேரிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவராகியுள்ளார்.
இந்நிலையில், கடந்த மாதம் 25ம் தேதி காலை தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் சேகர். கோனேரிக்குப்பத்தில் உள்ள தலையாரி தெரு பகுதி வழியாக சேகர் வந்துக் கொண்டிருந்த போது, அவரிடம் 4 பேர் ஏதோ பேசுவதுபோல் நெருங்கி வந்தனர்.
அப்போது, பைக்கை நிறுத்திய சேகரை அந்த கும்பல் சராமரியாக அரிவாளால் கொடூரமாக தாக்கியது. சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மிதந்த சேகர் நிலைத்தடுமாறி மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அந்த மர்ம கும்பல் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து சேகர் வீட்டிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் குடும்பத்தினர் ஓடி வந்து சேகரை மீட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அந்த மருத்துவமனையிலிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும்போது வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார் பல கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில், கோனேரிக்குப்பம் பகுதியை சேர்ந்த இளவரசன் (26), சக்தி (எ) சதீஷ்குமார் (23), அஜித் (25), ரங்கா (19) ஆகிய 4 பேரை போலீசார் கண்டுபிடித்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட இளவரசன் கோனேரிக்குப்பம் ஊராட்சி மன்ற வார்டு பெண் உறுப்பினரின் தம்பியாவார். ஊராட்சி மன்ற தேர்தலில் துணை தலைவர் பதவிக்கு தனது அக்காவை பரிந்துரை செய்ய கோனேரிக்குப்பம் சேகருக்கும், இவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும், கோனேரிக்குப்பம் ஊராட்சியில் உள்ள தொலைக்காட்சி கட்டிடம் அகற்றப்பட்டு அதில் வேறு ஒரு கட்டிடத்தை கட்டுவதிலும் தகராறு இருந்தது. இதனால், ஆத்திரமடைந்த இளவரசன் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து சேகரை கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.