திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: யார்? எங்கே போட்டியிடுகிறார்கள்?
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு திமுக போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று ஸ்டாலின் வெளியிட்டார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார். அதற்கு முன்னதாக கலைஞர், அண்ணா நினைவிடத்திலும் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்திலும் மரியாதை செலுத்தியிருந்தார் மு.க.ஸ்டாலின்.
போடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்து திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டி. ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை எதிர்த்து மூர்த்தி என்பவர் போட்டியிடுகிறார் தொண்டாமுத்துரில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து ஜல்லிக்கட்டு கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார்.
முதல்வர் பழனிசாமியை எதிர்த்து எடப்பாடியில் திமுக சார்பில் த.சம்பத்குமார் என்பவர் போட்டியிடுகிறார். திமுக துணைப் பொதுச் செயலாளர் கே.என்.நேரு திருச்சி மேற்கில் போட்டிடுகிறார். திமுகவின் கோட்டையான திருவண்ணாமலை எ.வ.வேலு போட்டியிடுகிறார். மன்னார்குடியின் டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா போட்டியிடுகிறார்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் மருத்துவர் எழிலன் போட்டியிடுகிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேனி தொகுதியில் போட்டியிடுகிறார். விருகம்பாக்கம் தொகுதியில் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர் ராஜா போட்டி. சைதாப்பேட்டையில் துரைசாமியை எதிர்த்து திமுக சார்பில் மா.சுப்ரமணியன் போட்டியிடுகிறார். திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் காட்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
அமமுகவிலிருந்து திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி கரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். விழுப்புரம் தொகுதியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை எதிர்த்து திமுக சார்பில் லட்சுமணன் போட்டியிடுகிறார். ஸ்டாலின் வழக்கம் போல் மு.க.ஸ்டாலின் குளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தொகுதியான திருவாரூரில் பூண்டி கே.கலைவாணன் போட்டியிடுகிறார்.
திமுக வேட்பாளர் பட்டியலில் 13 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையனை எதிர்த்து திமுக சார்பில் ஜீ.வி.மணிமாறன் போட்டியிடுகிறார்.