டெல்டாவில் நிலக்கரி எடுக்கும் திட்டம் - சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!
டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
நிலக்கரி சுரங்கம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் வடசேரி பழுப்பு நிலக்கரி திட்டம் என்ற பெயரில் வடசேரி, மகாதேவபட்டணம், உள்ளிகோட்டை, கூப்பாச்சிகோட்டை, பரவன்கோட்டை, கீழ் குறிச்சி, அண்டமி, கருப்பூர், பரவத்தூர், கொடியாளம், நெம்மேரி ஆகிய 11 கிராமங்களில் நிலக்கரி வெட்டி எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அதில், ‘தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு தமிழ்நாடு அரசிடம் ஒப்புதல் பெறப்படவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
கவன ஈர்ப்பு தீர்மானம்
இந்நிலையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக ,விசிக ,சிபிஐ, சிபிஎம், பாஜக உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர்.
இது தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களும் விவாதித்து வருகின்றனர்.
மேலும், நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரவுள்ளனர். சுரங்க விவகாரத்தில் நிலக்கரித்துறை அமைச்சர் உரிய பதிலளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.