நடுத்தெருவில் “கட்டிப்பிடி வைத்தியம்” - தொண்டர்களை ஆச்சரியப்படுத்திய திமுக, பாஜக வேட்பாளர்
காஞ்சிபுரம் அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக, பாஜக வேட்பாளர்கள் செய்த சம்பவம் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் காஞ்சிபுரத்திலும் தேர்தல் பணிகள் களைக்கட்டியுள்ளது. திமுகவின் கோட்டையாக திகழும் காஞ்சிபுரம் இந்த முறையும் அவர்களுக்கு கைக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சமீபத்தில் மாநகராட்சி அந்தஸ்தை காஞ்சிபுரம் பெற்றுள்ள நிலையில் மொத்தமுள்ள 51 வார்டுகளில் பெரும்பான்மை பெறும் கட்சியை சேர்ந்தவர்கள் முதல் மேயர் ஆகும் வாய்ப்பை பெறுவார்கள் என்பதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
அங்கு மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே காஞ்சிபுரம் மாநகராட்சியில் 5வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இலக்கியா சுகுமார் அப்பகுதியில் நேற்று வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது ராயன்குட்டை பள்ளதெரு பகுதியில் வாக்கு சேகரித்து கொண்டிருந்தபோது ஒரு வீட்டிற்குள் நுழைந்து வாக்கு கேட்க முயன்றார். அப்போது ஏற்கனவே வாக்கு சேகரிக்க சென்ற பாஜக வேட்பாளர் தமிழ்செல்வி அந்த வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்தார்.
ஒரே வார்டில் போட்டியிடும் இரண்டு கட்சி வேட்பாளர்களும் ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்ட நிலையில் இருவரும் நட்புடன் சிரித்துக் கொண்டு, தங்களின் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பரஸ்பரம் வழங்கி கொண்டதோடு கட்டிப்பிடித்துக் கொண்டனர். இதனைப் பார்த்த அப்பகுதி மக்களும், தொண்டர்களும் நெகிழந்தனர்.