மீண்டும் இணையுமா திமுக பாஜக கூட்டணி : அண்ணாமலை சூசகம்

annamalai reunion dmkbjp
By Irumporai Sep 02, 2021 12:06 PM GMT
Report

தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை தமிழ்நாட்டில் பாஜக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

இளைஞர்கள் படை நம் பக்கம் திரும்பி இருக்கிறது. இதற்கு காரணம் நம் கட்சிக்காக முன்னோர்கள், மூத்த நிர்வாகிகள் பிரதிபலன் பாராமல் உழைத்தது தான் எனக் கூறினார்.

மேலும், திமுக எதிர்க்கட்சியாக இருந்த பத்தாண்டு காலம் கும்பகர்ணன் போல தூங்கி கொண்டிருந்தது என்று நினைக்கிறேன். இப்போது தான் கண் விழித்து எழுந்து வந்திருக்கிறார்கள் என கூறிய அண்ணாமலை எதிர்க்கட்சியாக இருந்தபோது மத்திய பாஜக அரசு கொண்டுவந்த திட்டங்கள் அனைத்தையும் திமுக கண்மூடித்தனமாக எதிர்த்து வந்தது.

ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய அரசின் திட்டங்களை வரவேற்கிறார்கள். உதாரணமாக தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாடங்கள் தொடர்பான திட்டத்தைத் தொடங்கிவைக்க பிரதமர் மோடி வருகை தந்தார்.

அப்போது கோ பேக் மோடி என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்தனர். இப்போது தொழில் துறை அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசு, அந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளதாக வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதேபோல இப்போதும் வேளாண் சட்டங்கள், நீட் தேர்வுக்கு எதிராக செயலாற்றி வருகின்றனர். ஆனால் இன்னும் 3 மாதங்களுக்குள் மத்திய அரசின் திட்டங்களைப் புரிந்துகொள்வார்கள். முன்னர் எதிர்கட்சியாக இருந்து விமர்சித்த திமுகவினர் மத்திய அரசை புரிந்து ஒன்றிணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளனர் என்றார்.