கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது திமுகவினர் தாக்குதல்? - மருத்துவமனையில் 4 பேர் அனுமதி..!
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட போது திமுகவினர் அவர்களை தாக்கியதாக கூறி 4 அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வருமான வரித்துறையினர் சோதனை
இன்று காலை முதல் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 200க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
கரூரில் அவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர். இச்சோதனை குறித்து அறிந்து வந்த அவரது ஆதரவாளர்கள் வருமான வரித்துறை அதிகரிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் வந்த காரும் தாக்கப்பட்டது.
மாவட்ட எஸ்.பி விளக்கம்
இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனன் வருமான வரித்துறையினர் சோதனை குறித்து எந்த தகவலும் காவல்துறைக்கு தெரிவிக்கவில்லை.
சோதனைக்கு வந்த அதிகாரிகளுடன் ஆர்பிஎஃப் வீரர்களும் வரவில்லை. கார் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து அறிந்த உடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் தெரிவித்தார். கரூரில் 9 இடங்களில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதி
இந்த நிலையில், 4 வருமானவரித்துறை அதிகாரிகள் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது சகோதரர் அசோக் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திமுகவை சேர்ந்தவர்கள் வருமானவரித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு தாக்கியதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் காயத்ரி, சுனில் குமார், பங்கஜ் குமார், கல்லா சீனிவாசராவ் ஆகிய 4 வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.