14 இடங்களில் பாஜகவை நேரடியாக தாக்கும் திமுக: சமாளிக்குமா பாஜக?
சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து 14 இடங்களில் நேரடியாக போட்டியிடுகிறது திமுக. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக சார்பில் இன்று 173 இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மீண்டும் கொளத்தூரில் போட்டியிடுகிறார்.
அக்கட்சியின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார். காட்பாடியில் துரைமுருகனும் , போடியில் தங்கதமிழ்செல்வன், ஆலங்குளத்தில் பூங்கோதை ஆலடி அருணா, திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி கீதா ஜீவன் ,கரூரில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் திமுக திருவண்ணாமலை, திருக்கோவிலூர், துறைமுகம், ஆயிரம் விளக்கு, மொடக்குறிச்சி, திட்டக்குடி, நாகர்கோவிலில் போட்டியிடுகிறது. ராமநாதபுரம், விருதுநகர், அரவக்குறிச்சி ,திருவையாறு ,நெல்லை, ராதாபுரம், மதுரை வடக்கு உள்ளிட்ட இடங்களில் திமுக களம் காண்கிறது.
திருவண்ணாமலையில் வேலு, ராதாபுரம் – அப்பாவு, மதுரை வடக்கு – தளபதி, திருக்கோவிலூர் – பொன்முடி, மொடக்குறிச்சி – சுப்புலட்சுமி ஜெகதீசன், நாகர்கோவில் – சுரேஷ்ராஜன், தாராபுரம் – கயல்விழி செல்வராஜ், அரவக்குறிச்சி – இளங்கோ, நெல்லை – லட்சுமணன் உள்ளிட்டோர் பாஜக வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளளது.
இன்னும் பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படாத நிலையில் அக்கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.