அமைச்சரவை கூட்டத்தில் 2 தனிநபர்கள் - ஆளுநரிடம் முறையிட்ட திமுக, அதிமுக, பாஜக
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.
இந்நிலையில் அமைச்சரவை கூட்டத்தில் 2 தனிநபர்கள் கலந்து கொள்வது குறித்து பாஜக, அதிமுக, திமுக ஆகிய கட்சிகளும் இன்று தனித்தனியாக தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து புகார் தெரிவித்துள்ளனர்.
ஆளுநரை சந்தித்த பாஜக
பாஜக சார்பில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ஆகியோர் இன்று காலை ஆளுநரை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் மதுரையில் நடைபெற்ற மராத்தான் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற சிறுமிகளிடம் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அது குறித்து முறையான விசாரணை நடத்த உத்தரவிடவும், விசாரணை நிறைவடையும் வரை அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மனு அளித்துள்ளனர்.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள மக்கள் பவனத்தில், மேதகு தமிழக ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களை சந்தித்து தவெக ( @TVKVijayHQ )ஆட்சியில் நடைபெற்ற முக்கிய குற்றங்களைக் குறித்து புகார் அளித்தோம்.
— Nainar Nagenthran (@NainarBJP) July 4, 2026
குறிப்பாக, கடந்த ஜூன் 21-ஆம் தேதி, மதுரையில் நடைபெற்ற மராத்தான்… pic.twitter.com/9DeTVbw6yP
மேலும், ஜூன் 5 ஆம் தேதி நடைபெற்ற தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக, எந்தவித அரசுப் பொறுப்பும் வகிக்காத தனிநபர்களான ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி பங்கேற்றதாக எழுந்துள்ள புகார் குறித்தும் உரிய விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டி மற்றொரு மனு அளித்துள்ளனர்.
ஆளுநரை சந்தித்த அதிமுக
இதன் பின்னர் அதிமுக சார்பில் அதிமுக சட்டமன்றக் குழு கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிமுக எம்.பி இன்பத்துரை ஆளுநரை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில், " குதிரை பேரத்தின் மூலம் 6 அதிமுக எம்எல்ஏக்களை குதிரை வேகத்திலே இந்த அரசு விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருப்பதை கண்டித்தும், குதிரை பேரம் தொடர்பாக ஏற்கெனவே ஆளுநர் மற்றும் சட்டப்பேரவை தலைவரிடத்தில் கொடுக்கப்பட்ட புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆளுநரிடம் மீண்டும் ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளோம்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க,
— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) July 4, 2026
தமிழகத்தில் பொய்க்கால் குதிரை அரசு, குதிரை வேகத்தில் நடத்தி வரும் குதிரை பேரம் தொடர்பாகவும்; ரகசியக் காப்புப் பிரமாணத்தை மீறி அமைச்சரவைக் கூட்டத்தில் தவெக ஆதரவாளர்கள் கலந்துகொண்டது தொடர்பாகவும்… pic.twitter.com/PDF3nc4TpB
மேலும், ரகசிய காப்பு பிரமாணத்தை மீறும் வகையில், அமைச்சரவைக் கூட்டத்தில் தனி நபர்கள் இருவர் கலந்துகொண்டது குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம். ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.
ஆளுநரை சந்தித்த திமுக
இதனையடுத்து திமுக சார்பில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன், திமுக எம்.பி வில்சன், எம்.எல்.ஏ எஸ்.ஆஸ்டின், உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்தனர்.

இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆர்.எஸ்.பாரதி, "அரசுக்கு தொடர்பில்லாத ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகிய இருவரும் அமைச்சரவைக் கூட்டம், அரசு உயர்மட்டக் கூட்டம் உள்ளிட்டவற்றில் பங்கேற்கின்றனர். அதுமட்டுமல்லாமல், கூட்டங்களில் முதலமைச்சர் முன்னிலையிலேயே அதிகாரிகளுக்கு உத்தரவிடும் கேவலமான நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது.
தி.மு.க. சார்பில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து புகார் .
— DMK (@arivalayam) July 4, 2026
தி.மு.க. சார்பில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி - தலைமைக் கழக தலைமை சட்ட ஆலோசகர் பி.வில்சன், எம்.பி., - எஸ்.ஆஸ்டின், M.L.A., - சட்டத்துறை இணைச்… pic.twitter.com/UT0xavknid
இது தொடர்பாக கடந்த 1ஆம் தேதியே ஆளுநருக்கு மனு கொடுத்தோம். அப்போது அவர் இங்கு இல்லாத காரணத்தினால், இன்று ஆளுநரை நேரில் சந்தித்து இது குறித்து விளக்கினோம். அதனை கூர்ந்து கவனித்த ஆளுநர், “அப்படி அவசியமாக அவர்கள் இருவரும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ள பங்கேற்கவேண்டுமென்றால் முதலமைச்சர், அவர்களை அமைச்சராக்கியிருக்க வேண்டியதுதானே” என ஆளுநர் கூறினார். ஆளுநரின் இந்தப் பதில் ஆட்சியில் தவறு நடக்கிறது என்பதை அவரே ஒப்புக்கொள்வதுபோல் இருந்தது.
மேலும், அவதூறு வழக்குகளில் கைது செய்ய வேண்டிய அவசியமே கிடையாது. ஆனால், நேற்று அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். 6 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் தவெகவில் இணைந்துவிடும்படி கூறியதாக அவரே தெள்ளத்தெளிவாக கூறியிருக்கிறார்.
மேலும், எம்.எல்.ஏ. ஆஸ்டினிடமும் பேரம் பேசியுள்ளனர். ஆஸ்டினிடம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து போட்டியிட்டு வெல்ல வைத்து, அவர் கேட்கும் அமைச்சர் பதவியை கொடுப்பதாக பேரம் பேசியுள்ளனர்.
நாங்கள் ஆதாரத்துடன் நிரூபிக்க தயாராக இருக்கிறோம். இதேபோல், எம்.எல்.ஏ. சீனிவாசனிடம் ரூ. 50 கோடி பேரம் பேசியுள்ளனர். இவர்களிடம் யார் யார் பேசினார்கள் என்பதன் விவரங்களையும் ஆளுநரிடம் கொடுத்த புகார் மனுவில் தெரிவித்துள்ளோம்" என கூறியுள்ளார்.
ஒரே நாளில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட 3 கட்சிகளும் ஆளுநரை சந்தித்து தவெக அரசு மீது புகார் அளித்துள்ளது தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி
முதலமைச்சர் விஜய்யின் பொது நிகழ்வுகள் ஆலோசகராக விஷ்ணு ரெட்டியும், அரசியல் ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமியும் நியமிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்து எந்த ஒரு அரசாணையும் வெளியாகவில்லை.

தலைமைச் செயலகத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் பணி தொடர்பாக, கடலோரக் கிராமங்களைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளுடனான தமிழக அரசு சார்பிலான ஆலோசனைக் கூட்டத்தில் விஷ்ணு ரெட்டி உள்ள புகைப்படத்தை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே.பிரபு பகிர்ந்துள்ளார்.
அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுப்பதில் கன்னியாகுமரி மக்கள் நலனிற்கு எதிராக தமிழ்நாடு அரசு எவ்வித முடிவும் எடுக்காது.
— Dr.Tk.Prabhu (@drtkprabhu_TVK) July 3, 2026
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் பணி தொடர்பாக, கடலோரக் கிராமங்களைச் சேர்ந்த உள்ளூர் மக்கள்… pic.twitter.com/TfxN5BVEp5
இதில், நிதியமைச்சர் மரிய வில்சன், மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், இயற்கை வளங்கள் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, IAS குளச்சல் எம்.எல்.ஏ தாரகை கத்பட் உள்ளிட்ட அரசு பதவியில் உள்ளவர்களின் பெயர்களை குறிப்பிட்ட அமைச்சர் டி.கே.பிரபு விஷ்ணு ரெட்டியின் பெயரை குறிப்பிடவில்லை.
இதே போல், விஜய்யின் மேலாளராக இருந்த ஜெகதீஷ் பழனிசாமி முதலமைச்சரின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்ட தகவலும் அவராக சொன்ன பின்னரே தெரிய வந்தது.
இதில் தேர்தல் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி, தவெகவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில் அவர் சில நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் நிலையில், அவரை திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்க வைத்து கட்சி மற்றும் ஆட்சியில் வெளிப்படையாக பங்கு பெற வைக்க முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவை பூர்விமாக கொண்ட விஷ்ணு ரெட்டி, முதல்வர் விஜய்யின் கல்லூரி கால நண்பர் என கூறப்படுகிறது.