கூட்டணிக்காக நாங்கள் யாரிடமும் கெஞ்சவில்லை.. தேமுதிக சுதீஷ் ஆதங்கம்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. திமுக, அதிமுக தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. இதில், கூட்டணி பேச்சுவார்த்தையை உடனே நடத்த வேண்டும் என்று அதிமுகவுக்கு தேமுதிக தலைமை பல முறை பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தது. ஆனால், அதை அதிமுக தலைமை கண்டுகொள்ளவில்லை என்றே தெரிகிறது.
பாமக நிறுவனர் ராமதாசை அமைச்சர்கள் பலமுறை சந்தித்து பேசியபோதும் தேமுதிகவை உதாசினப்படுத்தினர். இதனால், கோபமடைந்த தேமுதிக துணை செயலாளர் சுதீஷ், கூட்டணிக்காக யாரிடமும் கெஞ்சவில்லை என்று சூடாக பேட்டியளித்துள்ளார். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தேமுதிக தேர்தல் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் தேமுதிக துணை செயலாளர் எல்.கே. சுதீஷ் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். “அப்போது, தேமுதிக அதிமுக கூட்டணியில் தான் உள்ளது. நாங்கள் கூட்டணிக்காக யாரிடமும் கெஞ்சவில்லை. அதிமுக கூட்டணியில் நல்ல தொகுதிகளை கேட்போம். எங்கள் கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை என கூறினார்.
மேலும், தேமுதிகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிதான் ஆட்சி அமைக்கும் தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு அடுத்ததாக 3-வது பெரிய கட்சியாக தேமுதிகதான் உள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக தான் பெரிய கட்சி” எனத் தெரிவித்தார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே கூட்டணி தொடர்பான பேச்சுக்களை தொடங்க இருப்பதாக இரண்டு கட்சிகளும் தெரிவித்துள்ளன.
எனவே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பல்வேறு மாற்றங்களை நிகழும் எனக் கூறப்படுகிறது.