தலையே போனாலும் தேமுதிக தலைகுனியாது: விஜயகாந்த் மகனி்ன் சர்ச்சை பேச்சை
தலையே போனாலும் தேமுதிக யாரிடமும் தலை குனியாது என்று விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை பங்கீடு செய்வதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன.
ஏற்கனவே அதிமுக வை மறைமுகமாக தேமுதிக விமர்சித்து வரும் நிலையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என தெரிகிறது. பாமக-வுக்கு இணையாக தங்களுக்கும் தொகுதிகள் வேண்டும் என தேமுதிக கேட்பதாகவும், ஆனால் 12 சீட் மட்டுமே தரப்படும் என அதிமுகவும் கூறியதாகவும் தெரிகிறது.
அதிக பட்சம் 15 தொகுதி வரை தருவதற்கு அதிமுக தயாராக உள்ள நிலையில், தேமுதிக பாமகவுக்கு இணையாக தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் கேட்டு வருகிறது. தொகுதி பங்கீடு இப்படி இழுபறியாக இருக்கும் சூழலில், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தலையே போனாலும் தலைகுனிய மாட்டோம், தேமுதிக எதற்கும் தலை குனியாது என பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து நேற்று இரவு பேஸ்புக்கில், நமது முதல்வர் விஜயகாந்த் என பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் எல்.கே.சுதீஷ் என்பது குறிப்பிடத்தக்கது.