ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் - தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்!

Vijayakanth M K Stalin DMK
By Swetha Subash May 24, 2022 01:44 PM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸார் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் - தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்! | Dmdk Vijayakanth Ration Product Smuggling

"தமிழகத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். பக்கத்து மாநில முன்னாள் மந்திரி சுட்டிக்காட்டும் அளவுக்கு இந்த அரசு செயல்படுவது என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

ரேஷன் அரிசி அதிக அளவில் கடத்தப்படுவது தமிழகத்தில் இருந்துதான் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

ரேஷன் அரிசியை சிலர் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கடத்திச் சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். மேலும் ரேஷன் கடை ஊழியர்கள் உணவு பொருட்களை பதுக்கி வைத்து, அதனை கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். அதனை உடனடியாக தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் - தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்! | Dmdk Vijayakanth Ration Product Smuggling

பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை கள்ள சந்தையில் வாங்கி, அதனை அண்டை மாநிலங்களுக்கு கடத்திச் சென்று வியாபாரம் செய்யும் கடத்தல்காரர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

ரெயில்கள் மற்றும் பேருந்துகள் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து மக்களுக்கு உணவுப் பொருட்கள் சரியான முறையில் சென்றடைகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

மற்றவர்கள் பாராட்டுக்குரிய அரசு என்று பெயரளவில் சொல்லி கொள்ளாமல் உண்மையிலேயே மக்கள் போற்றும் அரசாக இந்த அரசு இருக்க வேண்டும். வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற தேமுதிக அறிவித்த திட்டத்தை செயல்படுத்தியிருந்தால் இன்று இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி இருக்காது." என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.