திமுகவோடு நட்புறவு என்றைக்குமே உண்டு : பிரேமலதா விஜயகாந்த் திடீர் பல்டி..
கடந்த காலங்களில் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த பிரேமலதா விஜயகாந்த் தற்போது திமுகவோடு நட்புறவு என்றைக்குமே உண்டு என அந்தர் பல்டி அடித்துள்ளார்.
வருகிற உள்ளாட்சித் தேர்தலில், தேமுதிக நிலை குறித்து, தேர்தல் தேதி அறிவித்தப் பிறகு தலைமைக் கழகம் அறிவிக்கும் என மதுரை விமான நிலையத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,

"வெற்றியைக் கண்டு ஆணவப்படுவதோ, தோல்வியைக் கண்டு துவண்டு போவதோ தேமுதிக கட்சிக்கு கிடையாது. எங்களது கட்சி வலிமையான கட்டமைப்போடு உள்ளது. அதனை அடுத்தக் கட்டடத்திற்கு எடுத்துச் செல்லும் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன.
கட்சியை இன்னும் வலுப்படுத்த, உட்கட்சி தேர்தல் நடத்தலாமா? வேண்டாமா? என கேப்டன் தான் முடிவு எடுப்பார்.தேமுதிக கட்சிக்கு திமுகவோடு என்றைக்குமே நட்புறவு உண்டு. எங்கள் திருமணமே கலைஞர் தலைமையில்தான் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தல் அறிவித்தப் பிறகு, தேமுதிக நிலை குறித்து தலைமைக் கழகம் அறிவிக்கும் என்றார்.
கொரோனாவால் உயிரிழந்த எங்களது முக்கிய நிர்வாகிகள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற மிகப் பெரிய மன வருத்தத்தோடு மதுரைக்கு வந்து உள்ளேன். அவர்களது இழப்பு ஈடு இணை இல்லாதது. அவர்கள் விட்டுச் சென்ற பணியைத் தொடர எங்களது கழகத் தொண்டர்கள் வலிமையாக உள்ளனர் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.