செல்பி எடுக்க வந்த தொண்டர் - செல்போனை தட்டிவிட்டு பயங்கரமாக திட்டிய டி.கே.சிவக்குமார் - வீடியோ வைரல்

selfie angry DK Sivakumar
By Nandhini Dec 30, 2021 03:49 AM GMT
Report

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற தொண்டரின் செல்போனை தட்டிவிட்டு, அவரை கடுமையாக திட்டித்தீர்த்துள்ளார். கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருப்பவர் டி.கே.சிவக்குமார்.

காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு தினமான நேற்று மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் கட்சி நிகழ்ச்சி, ஒன்றில் கலந்து கொள்வதற்காக மாண்டியா மாவட்டம் சிவபுரி என்ற பகுதிக்கு வந்தார்.

அப்போது நடந்து சென்று கொண்டிருந்த டி.கே.சிவக்குமாரை நெருங்கி வந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கையில் மொபைல் போனுடன் அவருடன் செல்ஃபி எடுக்க முயற்சி செய்தார். காங்கிரஸ் தொண்டரின் செல்போனை தட்டிவிட்டதுடன், உங்களுக்கெல்லாம் அறிவு கிடையாதா என்று தொண்டரை பார்த்து சிவக்குமார் திட்டியுள்ளார்.

இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், தன்னுடைய தனது செயலுக்காக சிவக்குமார் விளக்கம் கொடுத்துள்ளார்.

“அனுமதியில்லாமல் செல்பி எடுக்க முயல்வது பாதுகாப்பு மீறல் தான். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி எப்படி தற்கொலைப் படையினர் மூலம் படுகொலை செய்யப்பட்டார் என்பதை மறக்கக் கூடாது, அரசியல்வாதிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். நான் செய்ததில் தவறேதும் கிடையாது. நானும் ஒரு சாதாரண மனிதன் தான். எனக்கும் உணர்வுகள் உண்டு, கோவம் வரும். ராஜீவ்காந்திக்கு நடந்தது போல எனக்கும் நடந்தால் என்ன செய்வது?”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டி.கே.சிவக்குமார் இதுபோல் பொது இடத்தில் நடந்துகொள்வது புதிது கிடையாது. சில மாதங்களுக்கு முன்னர் செல்பி எடுக்க முயன்ற தொண்டரின் கன்னத்தில் அவர் அறைந்தார். அதன் பின்னர் அறை வாங்கியவர் தனக்கு நெருங்கிய உறவினர் என அவர் விளக்கம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.