நியூசிலாந்து போட்டியில் இவருக்கு வாய்ப்பு கொடுங்க: தினேஷ் கார்த்திக் சொல்லும் வீரர் இவர்தான்..!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியில் இந்த இளம் வீரருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென இந்திய அணி வீரரும், வர்ணனையாளருமான தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப்போட்டியில் பேட்டிங் என்னதான் சிறப்பாக இருந்தாலும், பந்துவீச்சு தனி கவனம் பெற்றது.
விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்த புவனேஷ்வர் குமார் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மற்றொருபுறம் இளம் வீரர் முகமது சிராஜும் ஒரு விக்கெட் எடுத்து அசத்தினார். ஆனால் அவரது ஓவரில் ரன்கள் அதிகமாகக் கசிந்தது. அவர் 4 ஓவர்களில் 39 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றியிருந்தார்.
இந்தப் போட்டியில் சிராஜிக்கு காயமும் ஏற்பட்டது. கடைசி ஓவரை அவர் வீசும் போது, கையில் அடிபட்டு ரத்தம் வர தொடங்கியது. மைதானத்திலேயே அவசர அவசரமாக தையல் போடும் அளவிற்கு காயம் அதிகமாகி உள்ளது. இதனால் அடுத்த 2 போட்டிகளிலும் அவர் பங்கேற்பாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
இந்நிலையில் சிராஜின் இடம் குறித்து பேசியுள்ள தமிழக கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் படேலுக்கு வாய்ப்பு தர வேண்டும் எனக்கூறியுள்ளார். அவர், சிராஜ் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய இருவருமே சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள்.
நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு யாரை வேண்டுமென்றாலும் அணியில் சேர்க்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் என்னை பொருத்தவரை ஹர்ஷல் படேல் தான் டி20 போட்டிகளில் சிறந்தவர் என்று தோன்றுகிறது.
மேலும் ஹர்ஷல் படேல் ஸ்லோ பால்களை அதிகம் வீசும் திறமைப்பெற்றவர். அதுவும் சரியான நேரத்தில் சரியான ஸ்லோ பால்களை வீசும் திறன் உடையவர். இதுபோன்ற பந்துவீச்சுக்கு டி20 போட்டிகளுக்கு மிகவும் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.