ஏன் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லவில்லை - ஈபிஎஸ் கேள்விக்கு , முதலமைச்சர் சொன்ன பதில் என்ன ?
தமிழக சட்டப்பேரவையில் பேசிய அதிமுக உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன், தமிழ்நாட்டில்,அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்துச் சொல்லும் முதலமைச்சர் தீபாவளிக்கு மட்டும் வாழ்த்து சொல்லாதது ஏன் என்ற கேள்வியை எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது மதச்சார்பற்ற அரசு எனவும், அதன் காரணமாகவே தங்களின் கூட்டணிக்கு மதச்சார்பற்ற கூட்டணி என பெயர் வைத்ததாகவும் விளக்கமளித்தார்.
அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “முதலமைச்சர் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர். அனைத்து திருவிழாக்களுக்கும் வாழ்த்து சொல்லும் முதலமைச்சர் தீபாவளி பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்லாதது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கும் பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திட்டமிட்டு ஒரு சிலர் திமுக ஆன்மீகத்திற்கு எதிராக இருப்பது போல சித்தரிக்கிறார்கள். அதை இங்கேயும் பதிவு செய்ய அதிமுக உறுப்பினர் முயற்சி செய்கிறார்.
இது தந்தை பெரியார் ஆட்சி, அறிஞர் அண்ணா உருவாக்கிய ஆட்சி, கருணாநிதி வழி நடத்திய ஆட்சி. மொத்தமாக சொல்ல வேண்டுமேயானால் இது திராவிட மாடல் ஆட்சி. யாருக்கும் அடிபணிய மாட்டோம்” என குறிப்பிட்டார்.