தீபாவளிக்கு டிரஸ் எடுத்தால் ஆடு இலவசம் - திருவாரூரை கலக்கும் அதிரடி ஆஃபர்
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் திருவாரூரில் செயல்படும் ஜவுளிக்கடை ஒன்றின் அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நவம்பா் 4 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக தீபாவளி என்றாலே பட்டாசுக்கு அடுத்து நம் வாழ்வில் புத்தாடைக்கு தான் இடமுண்டு. இதனை விற்பனை செய்யும் ஜவுளிக்கடைகள் வாடிக்கையாளரை கவர பல்வேறு ஆஃபர்களை அறிவிப்பது வழக்கம்.
அந்தவகையில் திருவாரூரில் செயல்படும் சாரதாஸ் என்ற ஜவுளிக்கடை ஒன்று வழங்கவுள்ள பரிசுப் பொருட்களில் இரண்டாவது பரிசாக நான்கு பேருக்கு ஆடு தருவதாக தெரிவித்துள்ளது.கடந்த 17 வருடமாக இந்த கடையை மணிமுருகன் என்பவர் நடத்தி வருகிறார்.
மேலும் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக இங்கு தீபாவளி பண்டிகை பரிசு குலுக்கல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் பரிசு ஒருவருக்கு 4 கிராம் தங்கம், 2 முதல் 4வது பரிசு வரை 4 பேருக்கு ஆடு. 5 வது பரிசு 25 பேருக்கு பட்டுப்புடவை பரிசாக அறிவித்துள்ளார். இவற்றில் ஆடுகளை பரிசாக அறிவித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.