தீபாவளி ஸ்பெஷல் - நவ. 1 முதல் 16,540 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 16,540 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு மக்கள் சிரமமின்றி செல்வதற்காக ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல், இந்தாண்டு சிறப்புப் பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, வரும் நவம்பர் ஒன்று முதல் 3ஆம் தேதி வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 3,506 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, சென்னையிலிருந்து 9,806 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 6,734 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,540 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, வரும் 5ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,319 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 5,000 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 17,719 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.