தீபாவளி இறுதிகட்ட விற்பனை; கடை வீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
அலைமோதும் கூட்டம்
இன்று தீபாவளிக்கு முந்தைய கடைசி நாள் என்பதால் தி.நகர், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, புரசைவாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் காலையிலேயே சென்று தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.
பிற்பகலில் கடைவீதிகள் அனைத்தும் திருவிழா கூட்டம் போன்று காணப்பட்டது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி விடக்கூடாது என்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகமாகும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை சூடு பிடித்து வருகிறது. மக்கள் ஆர்வமுடன் இருசக்கர வாகனங்கள், கார்களில் வந்து பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர்.