புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 2026ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தகுதியுடைய ‘சி’ பிரிவு மற்றும் அரசிதழில் பதிவு செய்யப்படாத ‘பி’ பிரிவு (Non-Gazetted) ஊழியர்களுக்கு 30 நாட்களுக்கான ஊதியத்திற்கு இணையான போனஸ் வழங்க அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகக் கொண்டாடப்படும் தீபாவளி திருநாள், 2026ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசின் நடைமுறையைப் பின்பற்றி போனஸ் வழங்கப்படவுள்ளது.

போனஸ் பெறுவதற்கான தகுதிகள்
2026 மார்ச் 31ஆம் தேதி பணியில் இருந்திருக்க வேண்டும். 2025–26ஆம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் தொடர்ச்சியாகப் பணியாற்றியிருக்க வேண்டும்.
தகுதியுடைய ‘சி’ பிரிவு மற்றும் அரசிதழில் பதிவு செய்யப்படாத ‘பி’ பிரிவு ஊழியர்களாக இருக்க வேண்டும். போனஸ் கணக்கீட்டிற்கான மாத ஊதிய உச்சவரம்பு ரூ.7,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 30 நாட்களுக்கான போனஸ் தொகையாக அதிகபட்சம் ரூ.6,908 வரை வழங்கப்படும் என மத்திய அரசின் அலுவலகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே நடைமுறையின் அடிப்படையில் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்படவுள்ளது.