சாய் பல்லவியை மிரட்டுவதா? - கொதித்தெழுத்த ரம்யா
கடந்த 3 நாட்களாக தொடர்ந்து #SaiPallavi ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.
விராட பர்வம் படத்தின் புரமோஷனை முன்னிட்டு அளித்த பேட்டியின் போது காஷ்மீர் பண்டிதர்கள் கொலையையும் இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் அவர் ஒப்பிட்டு பேசியது தான் இந்த சர்ச்சைக்கே காரணம்.
வைரலான சாய் பல்லவி
விராட பர்வம் படத்திற்கான புரமோஷன் பேட்டியில் கலந்து கொண்ட சாய் பல்லவி ஒரு கேள்விக்கு சமீபத்தில் வெளியான காஷ்மீர் ஃபைல்ஸ் படம் பார்த்தேன்.
அதில் சொல்லப்படுவது போல காஷ்மீர் பண்டிதர்கள் அங்குள்ள இஸ்லாமியர்களால் கொல்லப்படுகிறார்கள் என்றால், அதே போலத்தன் இந்தியாவின் ஒரு பகுதியில் அதிலும் கோவிட் காலத்தில் மாடுகளை கொண்டு சென்ற ஒரு இஸ்லாமியரை சில இந்துக்கள் ஜெய்ஸ்ரீராம் சொல்லு என சித்ரவதை செய்தனர்.
மதத்தின் பெயரால் எங்கேயும் யாருக்கும் எந்தவொரு தொல்லையும் கொடுக்க கூடாது என்பது தான் தனது கருத்து என்று பேசினார். சாய் பல்லவியின் பேச்சு பாஜகவினருக்கு எதிரான பேச்சு என்றும் இந்து மதத்திற்கு எதிரான கருத்து என்றும் பலர் அவரை ட்ரோல் செய்யத் தொடங்கினர்.
அவர் சொன்னதில் எந்தவொரு தவறுமில்லை. சொந்த கருத்தை சொல்ல அவருக்கு முழு உரிமை உள்ளது என ஆதரவுகளும் குவிந்தன. நடிகை சாய் பல்லவிக்கு தனிப்பட்ட முறையில் மிரட்டல்களும் வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன
ஆதரவு தரும் திவ்யா
இந்நிலையில், நடிகை ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில் சாய் பல்லவி சொன்னது முற்றிலும் உண்மை என்றும், அவருக்கு யாரும் மிரட்டல் விடக் கூடாது என்றும், அவரை ட்ரோல் செய்யவும் கூடாது என்றும், தனது முழு ஆதரவு அவருக்கு உண்டு என ட்வீட் போட்டுள்ளார் .
அனைவரும் அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும். மதத்தின் பெயரால் இங்கே யாருக்கும் தீங்கு நேரக் கூடாது என தனது கருத்தை சாய் பல்லவி சொன்னது தப்பா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார் ரம்யா.