தேர்தல் ஆணையத்தைத் தொந்தரவு செய்யாதீர்கள்: உயர் நீதிமன்றம் அறிவுரை
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்.6 அன்று நடக்க உள்ளது. தமிழகத்தோடு சேர்த்து சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் புதுவை, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கும் மே 2 அன்று தான் வாக்கு எண்ணப்படுகின்றன. அதுவரை இவிஎம் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து ஒரு மாதத்துக்குப் பின் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் பல முறைகேடுகளுக்கு வழிவகுப்பதுடன், செலவும் ஏற்படுவதால், வாக்குப்பதிவு முடிந்தபின், அந்தந்த வாக்குச்சாவடிகளில் வாக்கு எண்ணிக்கையை நடத்த உத்தரவிடக் கோரி குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு நடந்த பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டுவந்து அவற்றைப் பாதுகாக்க மொத்த செலவு 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவழிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார். இதையடுத்து, தேர்தல் ஆணையத்துக்கு ஆலோசனைகளும், யோசனைகளும் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
மேலும், தேர்தல் நடத்தும் பணியை மேற்கொள்ளும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையில் வழக்குகள் தொடர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், நீதிமன்றங்களில் வழக்குகளை எதிர்கொள்வதை விடுத்து, தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தேர்தல் ஆணையத்தை அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.