இந்த 7 மாவட்டங்களில் வெயில் அனல் காற்றுடன் சுட்டெரிக்கும்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் இன்றும், நாளையும் 7 மாவட்டங்களில் சுட்டெரிக்கும் வெப்பத்துடன் அனல் காற்று நிலவும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் கடைசி இரு வாரத்திலேயே சூரிய வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியது. இதனையடுத்து கடந்த 5 நாட்களாக அனல் காற்று வீசக்கூடும்.
அதனால் மக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. 100 டிகிரி அளவுக்கு வெயில் ஒருபுறம், அனல்காற்று மறுபுறம் என மக்கள் தவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், சென்னை வானிலை மையம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது - திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களில், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர், திண்டுக்கல், கோவை ஆகிய 7 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உயரக்கூடும்.
அதேபோன்று வட கடலோர மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கும். இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், பகல் 12 மணி முதல் மாலை 4 மணிவரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.