இரட்டை கோபுர தாக்குதலில் சவுதி அரேபியா தொடர்பு? - ஆதாரத்தை வெளியிட்ட அமெரிக்கா

TwinTowerAttack FBI |
By Irumporai Sep 12, 2021 11:19 PM GMT
Report

இரட்டை கோபுர தாக்குதல் நடைபெற்று 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் சவுதி அரேபியா தொடர்புள்ள முக்கிய ஆதாரத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவை நிலைகுலைய வைத்த நாள் 2001 செப்டம்பர் 11. நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையத்தின் இரண்டு கட்டடங்களில் 2 விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. சில நிமிடங்களில் மூன்றாவது விமானம், வாஷிங்டன் டிசி அருகே அமெரிக்க ராணுவ தலைமையகத்தை தாக்க, நான்காவது விமானம் பென்சில்வேனியாவில் விழுந்தது.

4 விமானங்களையும் கடத்தி தாக்குதல் நடத்திய 19 பேர் உள்பட 2,996 பேர் இந்த கொடூர பயங்கரவாத தாக்குதலில் மாண்டனர். இதில் இரட்டைக் கோபுரத்தில் இறந்தவர்கள் மட்டும் 2,606 பேர். இந்த தாக்குதலுக்கு அல்கொய்தா தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது.

தாக்குதல் திட்டத்தின் மூளையாக ஒசாமா பின்லேடன் செயல்பட்டார். இந்த தாக்குதலை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க ராணுவம் படையெடுத்து, பங்கரவாதிகளை வேட்டையாடியது. ஒசாமா பின்லேடனை 10 ஆண்டுகள் இடைவிடாது தேடிய அமெரிக்கப் படை இறுதியில் 2011ல் பாகிஸ்தானில் கொன்றது.

இந்த தாக்குதல் தொடர்பான ஆவணங்களை அமெரிக்கா ரகசியமாகவே வைத்திருந்தது. இதனை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என இரட்டை கோபுர தாக்குதலில் பலியானோரின் குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தாக்குதல் நடைபெற்று 20 ஆண்டுகள் கழித்து தற்போது ஆவணங்களை அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. வெளியிட்டுள்ளது.

அதில், சவுதி அரேபியா தூதரக அதிகாரி ஒருவருக்கு இந்த தாக்குதலில் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், சவுதி அரேபிய அரசுக்கு இந்த தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் ஆவணங்களில் இல்லை.

விமானத்தை கடத்திய 19 பேரில் 15 பேர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள். சவுதி தூதரக அதிகாரியிடம் எஃப்.பி.ஐ. நடத்திய விசாரணையில், விமான கடத்தலில் ஈடுபட்ட இருவரை தனது குடியிருப்பில் தங்கிக்கொள்ள தான் அனுமதித்ததாகவும் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் பயணம் செய்ய உதவியதாகவும் தெரிவித்துள்ளார்.

அல்கொய்தாவின் திட்டங்களை செயல்படுத்த அவர் உதவியதோடு, தீவிரவாத இஸ்லாமிய இலக்கியங்களையும் அவர் வினியோகித்துள்ளார். இதற்காக அவரை பணியில் இருந்து நீக்க சவுதி அரேபிய தூதரகம் விரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு எவ்வாறு நிதியுதவி வழங்கப்பட்டது என்பது குறித்தும் இந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.