இயக்குநர் ஷங்கரின் சொத்துக்கள் முடக்கிய அமலாக்கத்துறை - என்ன காரணம்?
இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமான 10.11 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இயக்குநர் ஷங்கர்
ஜென்டில் மேன் தொடங்கி முதல்வன், அந்நியன், சிவாஜி என பல்வேறு படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஷங்கர்.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த், நடிகை ஐஸ்வர்யா ராய் எந்திரன் படம் வெளியானது. இந்த படம் உலகம் முழுவதும் ரூ.320 கோடி வசூல் செய்தது.
எந்திரன் கதை
என்னுடைய 'ஜூகிபா' புத்தகத்தின் கதையை திருடி இயக்குநர் ஷங்கர் எந்திரன் படத்தை எடுத்துள்ளார், இது காப்புரிமைச் சட்டப்படி கிரிமினல் குற்றம்' என அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன், 2011 ஆம் ஆண்டு சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
'நாங்கள் கதையைத் திருடவில்லை. இந்த வழக்கு செல்லாது' என்று உத்தரவிட கோரி இயக்குநர் ஷங்கரும் தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
சொத்துக்கள் முடக்கம்
சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்த இந்த வழக்கில், “ஜூகிபா' கதைக்கும் `எந்திரன்' படத்திற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இதில் காப்புரிமை மீறல் உள்ளதால் , எழும்பூர் நீதிமன்றத்தில் ஷங்கருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கைக் தொடர்ந்து நடத்தலாம்” என்று நீதிபதி புகழேந்தி தெரிவித்தார்.
ED, Chennai has provisionally attached 3 immovable properties registered in the name of S. Shankar, with a total value of Rs.10.11 Crore (approx.) on 17/02/2025 under the provisions of PMLA, 2002.
— ED (@dir_ed) February 20, 2025
இந்நிலையில், எந்திரன் பட கதையின் காப்புரிமை தொடர்பான வழக்கில், இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமான 10.11 கோடி ரூபாய் மதிப்பிலான 3 அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.