“வாரிசு அரசியல் தப்பே இல்லை” - இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பரபரப்பு பேச்சு
வாரிசு அரசியல் குறித்து நடிகரும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்த கருத்து சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய்யின் அப்பாவும், நடிகரும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் சிம்பு நடித்து வெளியான மாநாடு படத்தில் மிக முக்கியமான கேரக்டர் ஒன்றில் நடித்திருந்தார்.
இதனிடையே மாநாடு திரைப்படம் குறித்த அனுபவம் பற்றி பிரபல ஊடகம் ஒன்றிற்கு அவர் பேட்டியளித்துள்ளார். அதில் மாநாடு திரைப்படத்தில் நான் முதலமைச்சர் ஆக நடித்திருக்கிறேன். ஆனால், என்னிடம் என் கதாபாத்திரத்தைச் சொன்ன விதம் வேறு படத்தில் காட்சிகளாக எடுக்கப்பட்டு இருக்கும் விதம் வேறாக இருக்கிறது.

படத்தின் என் கதாபாத்திரத்தை இன்னும் நல்லவன் ஆகக் காட்டியிருக்கலாம் என நினைக்கிறேன். மாநாடு படத்தைப் பொறுத்தவரையில் பணப்பிரச்னை தான் காரணம் பணப்பிரச்னையால் தான் படம் வெளியீட்டில் இவ்வளவு குழப்பங்கள் ஏற்பட்டது. இந்தப் படத்தைப் பொறுத்த வரையில் உண்மையான அரசியலை அடிப்படையாக வைத்துத்தான் எடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் படத்தில் வாரிசு அரசியல் மற்றும் கட்சியில் மூத்த தலைவர்களுக்கான மரியாதைக் குறைவு ஆகியவற்றின் காட்சிகள் இருக்கும்.நிஜ வாழ்க்கையிலும் நான் வாரிசு அரசியலை வேண்டாம் எனச் சொல்ல மாட்டேன். ஆனால், கட்சி சார்ந்து இருக்கும் மூத்த உறுப்பினர்கள், தலைவர்களுக்கு ஏற்ற மரியாதையை கொடுக்க வேண்டும்.
இளைய தலைமுறை அரசியலுக்கு வருவது தவறு இல்லை. ஆனால், சீனியாரிட்டிக்கு உண்டான அங்கீகாரத்தையும் மரியாதையையும் கொடுக்க வேண்டும்.என்னைப் பொறுத்தவரையில் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்றோ, பதவி வேண்டும் என்றோ நினைத்ததும் இல்லை என கூறியுள்ளார்.
நான் வேறு ஒருத்தரை நினைத்தேன். அது ஒரு நாள் கண்டிப்பாக நடக்கும். நான் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஒரு ஆலோசகர் ஆக வேண்டுமானால் இருக்கலாம் எனவும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.