“நான் உயிரோட தான் இருக்கிறேன்” - பெயர் குழப்பத்தால் பிரபல இயக்குநருக்கு நிகழ்ந்த சம்பவம்
இயக்குநர் ஆச்சார்யா ரவி மறைவுக்கு 'ஷாஜகான்' இயக்குநர் ரவி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் பாலாவிடம் உதவியாளராக இருந்தவர் ரவி. 'ஆச்சார்யா' படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானதால் அனைவராலும் ஆச்சார்யா ரவி என்றழைக்கப்பட்டு வந்தார்.
இதனிடையே உடல்நலக் குறைவால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குநர் ரவி நேற்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். மறைந்த இயக்குநர் ரவியை, 'ஷாஜகான்' பட இயக்குநர் என சிலர் கருதி வந்தனர். சில ஊடகங்களிலும் அப்படியே தகவல் வெளியானதால் குழப்பம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து 'ஷாஜகான்' இயக்குநர் ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் வணக்கம். நான் விஜய் சாரை வைத்து ஷாஜகான் படத்தை இயக்கிய ரவி. நண்பர் ‘ஆச்சார்யா’ பட இயக்குநர் ரவி மரணம் அறிந்து அவரது ஆன்மா சாந்தி அடையவும், அவரை இழந்து வாடும் அவரது கும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் ரசிகர்களுக்கு ஏற்பட்ட குழப்பம் தீர்ந்தது.