படைப்புச் சுதந்திரத்திற்கு எதிராக வழக்குப்பதிவா? - கொந்தளிக்கும் இயக்குனர் பா. ரஞ்சித்..!
இயக்குனர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
வழக்கு
பிரபல இயக்குனர் பா. ரஞ்சித்தின் உதவி இயக்குனராக இருந்தவர் விடுதலை சிகப்பி.
இவர், கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி சென்னை ராஜரத்தினம் அரங்கில் ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ்ப் பேரவையில் நடந்த நிகழ்ச்சியில் இந்து கடவுள்களான ராமர், சீதை, அனுமன் ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக இவர் மீது பாரத் இந்து முன்னணி நிர்வாகி சுரேஷ் என்பவர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார் இவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பா.ரஞ்சித் கண்டனம்
இந்நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் தனது பேட்டி ஒன்றில் இந்த வழக்கு குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்த பேட்டியில், “ஒரு படைப்பின் மையப்பொருளை விளங்கிக் கொள்ளாமல் அல்லது விளங்கிக்கொள்ள விரும்பாமல் படைப்புச் சுதந்திரத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறை மற்றும் தமிழக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.
இக்கவிதையின் பாடுபொருள் மலக்குழி மரணம் பற்றியது, உண்மையில் அவைதான் பேசுபொருளாகியிருக்க வேண்டும்.
அதைத் திசை மாற்றி மதப் பிரச்சினையாக உருமாற்றும் நடவடிக்கையை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது” எனக் கூறி இருந்தார்.
தொடர்ந்து இவர், "தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் தலையை வெட்டச் சொன்னவர்கள் மீது எந்த வழக்கும் பாயாத நிலையில் விடுதலை சிகப்பி கற்பனையாக பேசி கவிதை வெளியிட்டதற்காக அவரின் மேல் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருப்பது பேச்சுரிமையை நசுக்கும் செயலாக கருதுகிறேன்.
அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் என காவல்துறையை கேட்டுக் கொள்கிறேன். அபி‘ராம’புரம் காவல்நிலையம் பெயரில் 'ராமர்' இருப்பதால் உடனே வழக்கா?” என்று காட்டமாக பேசியுள்ளார்.