‘அந்த மனுஷன் 100 வருஷம் நல்லா வாழனும்யா’ - இயக்குனர் மிஷ்கின் உருக்கம்

mysskinmkstalin mysskinmeetscm
By Swetha Subash Mar 14, 2022 07:31 AM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான தனது சந்திப்பு குறித்து இயக்குநர் மிஸ்கின் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக தனது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டுள்ள மிஸ்கின்,

'பிறந்த நாளன்று முதல்வருக்குப் பூங்கொத்து குடுக்க முடியுமா?' என்று சகோதரி கிருத்திகா உதயநிதியிடம் கேட்டேன். பத்து நிமிடங்களுக்குள் மூன்று பேர்கள் என்னை அழைத்தார்கள்.

'ஐயா இன்று முழுவதும் அலுவல்களில் இருக்கிறார், நாளை மதியம் சந்திக்கிறீங்களா?' எனக் கேட்டார்கள். 'அவரை தொந்தரவு செய்ய வேண்டாம். ஒரு வாரத்திற்குப் பிறகு எனக்கு இரண்டு நிமிடங்களை ஒதுக்கி தாருங்கள்' எனக் கேட்டுகொண்டேன்.

இன்று எனக்கு அழைப்பு வந்தது. 'மாலை ஆறரை மணிக்கு வாருங்கள். மலர்கள் கொடுக்க வேண்டாம், புத்தகங்களைக் கொடுங்கள்' என்ற அன்பான உத்தரவுடன் அழைத்தார்கள்.

‘அந்த மனுஷன் 100 வருஷம் நல்லா வாழனும்யா’ - இயக்குனர் மிஷ்கின் உருக்கம் | Director Mysskin Meets Mk Stalin And Gifts Books

20 தமிழ் புத்தகங்களை வாங்கி முதல்வர் வீட்டிற்குச் சென்றேன். ஒவ்வொரு படிக்கட்டிலும் அவரை நேசிக்கின்ற மனிதர்கள். ஒருவர் ஒரு கதவைத் திறந்து 'உள்ளே உட்காருங்க' என வேண்டிக் கொண்டார்.

அது முதல்வரின் அறை. அமைதி குடிகொண்டிருந்தது. என் கதாநாயகன், தமிழகத்தின் விடிவெள்ளி உதயநிதி ஓடி வந்து கட்டி அணைத்தான்.

பாலுள்ளம் கொண்ட என் தம்பியை அணைத்துக் கொண்டேன். ஒரு அறையைத் திறந்து 'அண்ணனுக்கு ஒரு காபி சொல்லுங்க' என்று சொல்ல, இரண்டு நிமிடங்களில் காபி வர,

நான் உதய்யின் கண்களைப் பார்த்து 'என்ன உதய் கண்ணெல்லாம் வீங்கியிருக்கு? தூங்கலையா?' எனக் கேட்க, 'தூங்க டைம் இல்ல சார்' என்று சொல்லி நான் ரசிக்கும் அழகு புன்னகையை உதிர்க்க...

‘அந்த மனுஷன் 100 வருஷம் நல்லா வாழனும்யா’ - இயக்குனர் மிஷ்கின் உருக்கம் | Director Mysskin Meets Mk Stalin And Gifts Books

'அப்பா கூப்டுறார்' என ஒருவர் வந்து சொல்ல, நாங்கள் உள்ளே சென்றோம். இந்த மாநிலத்தின் தந்தையைப் பார்த்தேன். 'நல்லாருக்கிங்களா மிஷ்கின்?' என்று என்னைக் கட்டி அணைத்தார்.

இங்கு உட்காருங்கள் என வலதுபுறம் சோபாவைக் காட்ட, அந்த கைகளை முத்தமிட்டு அமர்ந்தேன்.

புன்னகையுடன் 'எங்க ஆட்சி எப்படி இருக்கு மிஷ்கின்?' எனக் கேட்க… அதிர்ந்து போனேன்.

'இதுவரை திராவிடத்தில் இவ்வளவு அமைதி நிலவியதில்லை. ஊரே உங்களைக் கொண்டாடுகிறது. ஏன், எதிர் கட்சிக்காரர்கள் கூட உங்களை வணங்குகிறார்கள். மக்கள் அனைவரும் உங்களை மனதார போற்றுகிறார்கள்' என்று சொன்னேன்.

அதற்கு அவர் 'அந்த நம்பிக்கை தான் எனக்கு ரொம்ப பயம் கொடுக்குது. தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னும் நான் என்ன நல்லது செய்ய போறேன்,

எப்படிச் செய்ய போறேன் என நான் யோசித்துக் கொண்டே இருக்கிறேன்' என்று அவர் ஒரு குழந்தை போல் சொல்ல, என் கண்கள் பனித்தன.

அதற்கு மேல் வார்த்தை வராமல், கையெடுத்துக் கும்பிட்டு வெளியே வந்தேன். என் தம்பி ஆதித்யா காரை ஸ்டார்ட் செய்ய, நான் கதவைத் திறந்து உள்ளே ஏறும் முன்,

'இந்த மனுஷன் 100 வருஷம் நல்லா வாழனும்' என்று இயற்கையை வேண்டி கதவைச் சாத்த, அந்த கார் மெதுவாக நகர்ந்தது.

அந்த மாலை மிகவும் அழகாக இருந்தது." என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த அனுபவம் குறித்து அழகாய் விவரித்துள்ளார் இயக்குனர் மிஷ்கின்.