எப்படி மீட்பது என்றே தெரியவில்லை; இவ்வளவு பெரிய பாதிப்பை எதிர்பார்க்கவில்லை - இயக்குநர் மாரி செல்வராஜ்!
தொடர் கனமழையால் இவ்வளவு பெரிய பாதிப்பை மக்கள் எதிர்பார்க்கவில்லை என்று இயக்குநர் மாரி செல்வராஜ் வேதனை தெரிவித்துள்ளார்.
வெள்ள பாதிப்பு
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நூற்றுக்கணக்கான பயணிகளுடன் ரயில் ஒன்று கடந்த 3 நாட்களாக சிக்கியுள்ளது.
இதனையடுத்து பயணிகளை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியை சேர்ந்தவர் என்ற அடிப்படையில், இயக்குநர் மாரி செல்வராஜ் மீட்புப்படையினருடன் சேர்ந்து உதவினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "மழை வெள்ளத்தால் ஏராளமான கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தூத்துக்குடி மாவட்டம் தொடங்கும் இடத்திலிருந்து முடியும் இடம் வரை வெள்ளம் அதிக வேகத்துடன் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களை எப்படி மீட்பது என்றே தெரியவில்லை என்றார். மேலும் பேசிய அவர் "இந்த பாதிப்புகளை பேரிடராக கருதி அரசு பணியாற்றினால் மட்டுமே மக்களை மீட்க முடியும்.
மாரி செல்வராஜ் வேதனை
மக்கள் யாரும் இவ்வளவு பெரிய பாதிப்பை எதிர்பார்க்கவில்லை என்றும், ஆடுகள், மாடுகள், உடைமைகளை உள்ளிட்டவற்றை விட்டு எங்கு செல்வது என்று தெரியாமல் பெரும் வெள்ளத்தில் மக்கள் சிக்கிக் கொண்டுள்ளதாகவும் இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் "ஆங்காங்கே வீடுகளின் மொட்டை மாடிகளில் 300க்கும் மேற்பட்டோர் கூட்டம் கூட்டமாக தங்கி உள்ளதாகவும், 'ஹெல்ப்' என்ற ஒற்றை வார்த்தையில் மட்டுமே மெசேஜ்கள் தங்களுக்கு வருவதாகவும் கூறினார். மொத்த மாவட்டத்துக்கும் ஒரு ஆறு ஓடுவதாகவும், துண்டிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்றடைய வழி தெரியவில்லை என்றும் தொடர்ந்து அதற்கான பணிகளை பேரிடர் மீட்புப் படையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், மழை அதிகம் பெய்ய வேண்டும் என்பதே மக்கள் ஆசை. அதற்காகத்தான் மக்கள் தொடர்ந்து கோயில்களில் வழிபாடு நடத்துகின்றனர். ஆனால் இவ்வளவு பெரிய பாதிப்பை மக்கள் எதிர்பார்க்கவில்லை" என்று வேதனை தெரிவித்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.