இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
6 மாத சிறை தண்டனை
"எண்ணி ஏழு நாள்" படத்தை தயாரிப்பதற்காக நான் ஈ, இரண்டாம் உலகம் படங்களை தயாரித்த பி.வி.பி. கேப்பிடல் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய் தொகையை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக இயக்குனர் லிங்குசாமி கடனாக பெற்றுள்ளார்.
இந்த நிலையில் லிங்குசாமி 35 லட்சம் ரூபாய்க்கான காசோலையை (செக்) வங்கியில் பணமில்லாமல் திரும்பியதால் பிவிபி நிறுவனம் தரப்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து 2022 ஆகஸ்ட் 22 ஆம் தேதி தீர்ப்பளித்தது.
மீண்டும் மேல்முறையீடு
மேலும் பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டது.
சைதாப்பேட்டை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து லிங்குசாமி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதையடுத்து மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, சைதாப்பேட்டை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது.
மேலும் லிங்குசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது.
இந்த நிலையில் லிங்குசாமி தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு எதிராக மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளார்.