சினிமாவை செத்துக்கிய மேதாவி கே.பாலச்சந்தர் பிறந்த தினம் இன்று!
ரஜினிகாந்த், கமலஹாசன், பிரகாஷ்ராஜ், விவேக் என தமிழ் சினிமாவின் ஆளுமைகள் பலரையும் அறிமுகப்படுத்தி செதுக்கி செம்மைப்படுத்திய பிரம்மாவாக திகழ்ந்தார் பாலச்சந்தர்.
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களின் 91-வது பிறந்த நாள் இன்று. திருவாரூர் அருகேயுள்ள நன்னிலம் கிராமத்தில் பிறந்து இயக்குநர் சிகரம் என கொண்டாடும் அளவிற்கு வளர்ந்தவர் கே.பாலச்சந்தர்.
ஆசிரியர் பணியில் இருந்துகொண்டு நாடகங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிய அவர், அவற்றில் பரீட்சார்த்தமாக பல முயற்சிகளை முன்னெடுத்தார். அதுதான், திரையிலும் பல புதுமைகள் படைக்க உறுதுணையானது. எம்.ஜி.ஆர் நடித்த 'தெய்வத்தாய்' படத்திற்கு உரையாடல் எழுதி, திரைத்துறைக்குள் வந்த கே.பாலச்சந்தரை, அந்தப் படத்தின் கூர்மையான வசனங்கள் பிரபலமடைய வைத்தது.
தொடர்ந்து, அவர் கதை எழுதிய 'சர்வர் சுந்தரம்' படம் அவருக்கு பெரும் வெற்றியை அளித்தது. புராண திரைப்படங்களையும், வரலாற்று திரைப்படங்களையும் பார்த்துக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்திற்கு பயணிக்கச் செய்து, மனித உறவுகள் சந்திக்கும் சிக்கல்களையும், பெண் உரிமைகளையும் பெண் விடுதலையும் பேசவைத்தவர் கே.பாலச்சந்தர் தான்.
நாடகத்துறை, சினிமாத்துறை, தொலைக்காட்சி தொடர் என எல்லா வடிவங்கங்களிலும் முத்திரை பதித்த பாலச்சந்தர், தயாரிப்பாளராக ரோஜா திரைப்படத்தின் மூலம் ஏ.ஆர்.ரகுமான் என்ற பொக்கிஷத்தையும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்.
அந்தந்த காலகட்டத்தில் சமூகத்திற்கு எது தேவையோ அதனை கருப்பொருளாக்கி திரைக்கதை அமைப்பதில் வல்லவர் கே.பாலச்சந்தர். எதிர் நீச்சல், மேஜர் சந்திரகாந்த், நாணல், வறுமையின் நிறம் சிவப்பு என அவரது பல திரைப்படங்களை அதற்கு உதாரணமாக்க முடியும்.
ஒருபுறம் அழுத்தமும் கனமும் நிறைந்த படைப்புகளை கொடுத்த கே.பாலச்சந்தர் முழுக்க முழுக்க நகைச்சுவை நிறைந்த பூவா தலையா, தில்லுமுல்லு போன்ற படங்களையும் இயக்கி அசத்தினார். அதுதான், பாலச்சந்தர் இப்படித்தான் இருக்கும் என்கிற முன் யோசனை எதுவுமின்றி ரசிகர்களை திரையரங்கு இழுத்து வந்தது.
ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலமாக தமிழ் சினிமாவின் கலைத்துறையில் பிதாமகனாக விளங்கிய பாலச்சந்தர், ஏழு முறை தேசிய விருதுகளாலும், 13 முறை பிலிம்பேர் விருதுகளாலும் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
திரைத்துறையின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான தாதாசாஹேப் பால்கே விருதும், இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதும், பாலச்சந்தரை பெருமைப்படுத்தி உள்ளபோதும் தமிழ் சினிமா ரசிகர்களும் கலைஞர்களும் இந்த விருதுகளை காட்டிலும் உயரமான கௌரவத்தோடு பாலச்சந்தரை நினைவில் சுமந்து கொண்டுள்ளனர்.
இன்றும் புதுமை பேசும் அவரது படைப்புகள் என்றென்றும் கே.பாலச்சந்தர் எனும் பெரும் படைப்பாளியின் பெருமைகளை பேசிக்கொண்டே இருக்கும்.
ஓய்வை நாடிய மனிதர்கள் களைத்து போய் விடுவார்கள் என்று உலகிற்கு உரைக்க சொன்ன வித்துவான் பாலச்சந்தர், தான் மறையும் வரையிலும் அயராது உழைத்து சினிமாவை
வடிவமைத்துள்ளார்.